Monday, July 27, 2026

கவிதைப் பயணம்: 1 - வெயில்

 

வெயில்


அவளுக்கோர் கடிதம்
        சினங்கொண்டதற்கு மன்னிக்க
நீ சுட்டாலும், எரித்தாலும், உறைத்தாலும்
        மறுபடியும் வந்தால் போதுமென்றேன்...
இவள் இம்சை தாங்கமுடியவில்லை!!!
வந்தாளவள் வெயிலாய்!!!
        சென்றாளிவள் பனியாய்!...
அக்கரைக்கு இக்கரை பச்சை.








        

பாரதியார் கவிதைகள்!!!

 

பாரதி!!!   அனைவருக்குமானவனன்றோ!!!
என்னை ஈர்த்த அவனது படைப்புகளில் சில !!!

 




தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் – அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் – என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் – இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் – இனி
என்னைப் புதியவுயி ராக்கி – எனக்
கேதுங் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத்தெளிவு செய்து – என்றும்
சந்தோசங் கொண்டிருக்கச் செய்வாய்…

Friday, May 28, 2021

தந்தையின் தாயைக் காண இரயில் பயணம்


         அது ஒரு காலம்.. இப்படி எல்லாருக்குமே ஒரு கடந்த  இல்லை  வசந்த காலம் என்று ஒன்று இருக்கும் அல்லவா. எனக்கும் அப்படி இருந்தது.. வருடா  வருடம்  பள்ளி விடுமுறை நாட்களில், நானும் ஊருக்கு போவேன், அதுவும் இரயில் பயணம். என் அம்மா அப்பா சொல்வார்கள்  இரவில்  இரயில் ஏறுவது உத்தமம் என்று. ஏனென்றால் குழந்தைகள் நாங்கள் சன்னலோரம் இருக்கை வேண்டும் என்று அடம் பிடிக்க இயலாது.  அதுவும் இல்லாமல் இரயில் ஏறிய சில நிமிடங்களில் உறங்கிவிடுவோம் என்று .. என்ன ஒரு கணக்கு!!! :) 


        அவர்கள்  சொன்னதும் சரி தான். என் அண்ணன் எப்படியோ எனக்கு தெரியாது ,ஆனால் நான் பகல் நேரத்தில்  இரயில் ஏறினால்  சன்னல் ஓரம் இருக்கை வேண்டும் என்று கடவுளை தொழ ஆரம்பித்து விடுவேன். அப்படி கிடைத்து விட்டால் எனக்கு  நானே சொல்லிக் கொள்வேன், பார்த்தாயா  நான் நல்ல பிள்ளையாக  இருந்ததினால் தான் சாமி எனக்கு சன்னலோரம் இருக்கை  கொடுத்தாரென. இப்போது  நினைத்தாலும்  சிரிப்பு தான் வருகிறது. 

         சரி பகலில் இரயில் ஏறினால் நிறைய சலுகை இருக்குமே. :) என் அப்பா சாப்பிடுவதற்கு நொறுக்குத் தீனி , படிக்க சில மாத பத்திரிக்கைகள் வாங்கித் தருவார். நானும் அண்ணனும் சன்னலோரத்தில் சாய்ந்து கொண்டு பனைமரம் , தென்னை மரம் எத்தனை உள்ளது என்று எண்ண  ஆரம்பித்து விடுவோம் :) 


            ஊருக்கு போய் சேருகிற  நேரம் ஞாயிறு தன் நெற்றியை காண்பிக்கும் நேரம். மெல்ல மெல்ல  விடியல் தொடங்கும். அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். என் பாட்டி பரபரவென்று  சமைத்துக் கொண்டு இருப்பார்கள். என் அப்பா, அம்மா, அண்ணன் எல்லாரும் சுடச்சுட இட்லி சாப்பிடுவார்கள். எனக்கு முந்தின நாள் இரவு வடித்த சாதத்தில்  புளி ஊற்றி வைத்து அதை வாணலியில் வெங்காயம் , வர மிளகாய் சில போட்டு சுடச்சுட தாளித்து  தருவார்கள் என் தந்தையை பெற்ற தாய். ஆகா என்ன மணம் , சுவை !!! அந்த கைப் பக்குவம் யாருக்கு வரும். இன்று நாமும் சமைக்கிறோம் , சுவையாகத்தான். ஆனால் நம் முந்தையவர்களிடம் இருந்த ஏதோ ஒன்று இன்று நம்மிடம் இல்லை. அவர்கள் குறைவான பொருள்களுடன் சுவையாக சமைத்தார்கள். நம்மில் பலர் நிறைய பொருள்கள் சேர்த்து சுவையாக இல்லையே என்று புலம்புகிறோம்.  

            என் பாட்டிக்கு, எங்க அண்ணனை  தான் மிகவும்  பிடிக்கும். பேரன் அல்லவா, நான் பேத்தி தானே ! அப்படி என்ன அவன் மேல் மட்டும் அப்படி ஒரு பாசம் ? ஏன் பாட்டி உங்களுக்கு அண்ணனை தானே மிகவும் பிடிக்கும் என்று கேட்டால் , ஒரு சிறிய புன்னகை.  அந்த ஒரு புன்னகையின் அர்த்தம், ஆமாம்  எனக்கு என் பேரன் தான் என்று சொல்லி விடும். 

            ஒரு பாட்டிக்கு என் அண்ணனை பிடிக்கும் போது , என்னை பிடிக்க ஒரு பாட்டி இருக்க மாட்டாரா என்ன !! :) அடுத்த இடுகையில் ...