மனதில் உறுதி வேண்டும்!!!
மனதில் உறுதி வேண்டும்,
வாக்கினிலே இனிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவி மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
அக்கினிக் குஞ்சு!!!
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.
கண்ணம்மா - என் காதலி!!!
சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்திரங்களடீ!!!!
தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
பாங்கியோ டென்றுசொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் - அடிகண்ணம்மா!
மார்பு துடிக்குதடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப் போலவே
பாவை தெரியுதடீ!!!
பாயுமொளி நீயெனக்கு - பார்க்கும்விழி நானுனக்கு
தோயுமது நீயெனக்கு - தும்பியடி நானுனக்கு
வாயுரைக்க வருகுதில்லை - வாழிநின்றன் மேன்மையெல்லாம்
தூயசுடர் வானொளியே - சூறையமுதே கண்ணம்மா
வீணையடி நீயெனக்கு - மேவும்விரல் நானுனக்கு
பூணும்வடம் நீயெனக்கு - புதுவயிரம் நானுனக்கு
காணுமிடந் தோறுநின்றன் - கண்ணினொளி வீசுதடீ
மாணுடைய பேரரசே - வாழ்வுநிலையே! கண்ணம்மா!!!


No comments:
Post a Comment